சூரியனில் இருந்து பிரம்மாண்டமான ‘பறவை இறக்கை’ வடிவிலான வெடிப்பு ஒன்று நிகழ்ந்து, அதிலிருந்து அதி வெப்ப பிளாஸ்மா அலைகள் சூரியனின் வடக்கு அரைக்கோளம் முழுவதும் சீறிப் பாய்ந்ததை வானியலாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுள்ளனர். இந்த நிகழ்வு உலகெங்கிலும் பரபரப்பையும், சற்று அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சூரியப் பொருளால் ஆன இந்த பிரம்மாண்ட இழை, 6 இலட்சம் மைல்களுக்கு (ஒரு மில்லியன் கிமீ) மேல் நீளமானது! இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட இரு மடங்குக்கு மேல் அதிகம் என்பது இதன் அளவின் தீவிரத்தைக் காட்டுகிறது. நாசாவின் சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் பதிவு செய்த வியக்க வைக்கும் காணொளிகளில், பூமியை விட 75 மடங்கு பெரிய பிளாஸ்மா இழைகள், இரண்டு பெரிய ‘இறக்கைகள்’ போல சூரியனில் இருந்து பிரிந்து செல்வது தெளிவாகத் தெரிகிறது.
இந்த வெடிப்பிலிருந்து வெளியேறிய பிளாஸ்மாவின் ஒரு பகுதி நாளை (வெள்ளிக்கிழமை) பூமியைத் தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணிக்கின்றனர். இது ஒரு ‘glancing blow’ அல்லது ஓரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதன் தாக்கத்தின் அளவு குறித்து உறுதியாகக் கூற முடியவில்லை.
‘அரோரா’ ஆய்வாளரான ஜூரே அடானாக்கோவ் (Jure Atanackov) சமூக வலைத்தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், இந்த வெடிப்பின் முழுமையான சக்தி, கடுமையான அல்லது தீவிர புவி காந்தப் புயலைத் (geomagnetic storm) தூண்டக்கூடும் என்று கணித்துள்ளார். அதிகாரப்பூர்வ தரவரிசை அமைப்புகளில் இது மிக உயர்ந்த நிலையாகும்.
நல்ல செய்தி என்னவென்றால், பெரும்பாலான சூரியப் பொருட்கள் சூரியனின் வடக்கு துருவத்திலிருந்து வெளியேறியதால், அவை பூமியைத் தவிர்த்துவிடும். இருப்பினும், கடந்து செல்லும் இந்த சூரியப் புயலின் ‘வாலில்’ இருந்து பூமிக்கு ஒரு தாக்கம் இருக்கும் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சூழல், வான்வெளியில் தோன்றும் பிரமிக்க வைக்கும் வட ஒளிகளைக் (Northern Lights – Aurora Borealis) காணும் வாய்ப்பை அதிகரிக்கும் அதே வேளையில், மின் கட்டமைப்பு மற்றும் மின் சாதனங்களில் பாதிப்பு அல்லது இடையூறு ஏற்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அழகும் அபாயமும் நிறைந்த இந்த சூரிய நிகழ்வை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.