ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில், பசிபிக் பெருங்கடலின் அவாச்சா விரிகுடா கடற்கரையை ஒட்டி, இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் ஒரு மணி நேரத்தில் 5 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.6 முதல் 7.4 வரை பதிவாகியுள்ளன. யூரோ மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாகத் தெரிவித்துள்ளது. நிலநடுக்கங்கள் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதாகவும், பொருட்கள் கீழே விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியிலேயே காத்திருந்தனர்.
ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது திரும்பப் பெறப்பட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய அவசரகால அமைச்சகம் எச்சரித்துள்ளது. அலூட்ஸ்கி மாவட்டத்தில் 60 செ.மீ உயரமும், உஸ்ட்-கம்சட்ஸ்கி பகுதியில் 40 செ.மீ உயரமும், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரில் 15 செ.மீ உயரமும் கொண்ட அலைகள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.