கடந்த சில நாட்களாக நிலநடுக்கங்கள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், நேற்றையதினம் இரவு மேற்கு துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 எனப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், பலேகேசீர் மாகாணத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதும், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிர் இழப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. இருப்பினும், இஸ்தான்புல் அருகிலுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மன் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 11 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்க அபாயம் உள்ள நாடுகளில் துருக்கியும் ஒன்று. 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்தது குறிப்பிடத்தக்கது.