விமானங்களில் பவர் பேங்க் எடுத்துச் செல்லத் தடை: எமிரேட்ஸ் அதிரடி உத்தரவு!

விமானங்களில் பவர் பேங்க் எடுத்துச் செல்லத் தடை: எமிரேட்ஸ் அதிரடி உத்தரவு!

துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், பயணிகளுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. வருகிற அக்டோபர் 1, 2025 முதல், எமிரேட்ஸ் விமானங்களில் பவர் பேங்குகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள் என்ன?

  • பவர் பேங்குகளை விமானத்தில் எடுத்துச் செல்லலாம், ஆனால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
  • பவர் பேங்கின் கொள்ளளவு 100 வாட்-மணி நேரத்திற்கு (Wh) குறைவாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பயணியும் ஒரு பவர் பேங்க் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
  • பவர் பேங்க் பற்றிய தகவல் (கொள்ளளவு) தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
  • பவர் பேங்குகளை Overhead bin-ல் வைக்கக்கூடாது. இருக்கைக்கு அடியில் உள்ள பையிலோ அல்லது சீட் பாக்கெட்டிலோ மட்டுமே வைக்க வேண்டும்.
  • விமானத்தில் உள்ள சார்ஜிங் பாயிண்டுகளில் பவர் பேங்குகளை சார்ஜ் செய்யக் கூடாது.

இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

விமானங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் லித்தியம்-அயன் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகளால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்துள்ளன. பேட்டரிகள் அதிக வெப்பமடைதல், தீப்பற்றுதல் அல்லது வெடித்தல் போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக, தரமற்ற அல்லது பழைய பவர் பேங்குகளில் இந்த அபாயம் அதிகம் உள்ளது.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானங்களில் ஏற்படும் இதுபோன்ற தீ விபத்துக்களைத் தடுக்க, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கதே பசுபிக், கொரியன் ஏர் போன்ற பல விமான நிறுவனங்களும் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.