அவுஸ்திரேலியாவையே உலுக்கிய நச்சு காளான் கொலை வழக்கில் குற்றவாளியான எரின் பேட்டர்சனுக்கு தண்டனை வழங்குவதற்கான விசாரணை விக்டோரியா மாநில உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தைக் கலங்கடித்தன. அப்போது, காளான் விஷம் கலந்த உணவை உண்டு, பெரும் போராட்டத்திற்குப் பிறகு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்த பாதிரியார் இயான் வில்கின்சன் (Ian Wilkinson) அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்தது.
“அவள் என்னைப் பாதி உயிருடன் விட்டுச் சென்றுவிட்டாள்!” “என் வாழ்க்கையின் சந்தோஷம், அமைதி, மகிழ்ச்சி எல்லாவற்றையும் நான் இழந்துவிட்டேன். என் மனைவி மற்றும் என் இரண்டு நெருங்கிய நண்பர்களின் மரணத்திற்குப் பிறகு, நான் பாதி உயிருடன் இருப்பது போல் உணர்கிறேன். என் வாழ்க்கையின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் சிதைந்துவிட்டது” என்று கண்ணீருடன் அவர் தெரிவித்தார்.
மேலும், “எனக்கு இழைக்கப்பட்ட இந்தத் துரோகத்திற்காக நான் அவளை மன்னிக்கிறேன். ஆனால், என் மனைவி மற்றும் நண்பர்களின் உயிரைப் பறித்ததற்காக அவளை ஒருபோதும் மன்னிக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம், எரின் பேட்டர்சன் தனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தில், “டெட் கேப்” என்ற நச்சு காளான்களைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவை விருந்தினர்களுக்குப் பரிமாறினார். அந்த உணவை உண்ட மூன்று பேர் உயிரிழந்தனர். இயான் வில்கின்சன் மட்டும் மருத்துவப் போராட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தார்.
இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்த எரின் பேட்டர்சன் மீது ஜூலை மாதம் குற்றம் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.