UPDATE :2 கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பெரும் பரபரப்பு. அங்கே வந்த மர்மமான ஒரு பார்சல் வெடிகுண்டாக இருக்கலாம் என ரஷ்ய அதிகாரிகள், இலங்கை புலனாய்வுத் துறைக்கு அறிவிக்க, உடனே ராணுவம் அங்கே குவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோப்ப நாய்களோடு பொலிசார் ரஷ்ய தூதரகத்தை சுற்றிவளைத்துள்ளார்கள் என ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு: கொழும்பு நகரில் உள்ள ரஷ்ய தூதரக வளாகத்தில் இன்று (ஏப்ரல் 28) மதியம் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சம்பவத்தால் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவியது! ஒரு வெளிநாட்டவர் தூதரக அலுவலகத்தில் ஒரு பார்சலை, அதற்குள் ஒரு லேப்டாப்புடன், கொடுத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தூதரக ஊழியர்கள் உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்களும் தாமதிக்காமல் சினமன் கார்டன்ஸ் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சிறப்பு அதிரடிப்படையினர் (STF), வெடிகுண்டு அகற்றும் படையினர் மற்றும் சினமன் கார்டன்ஸ் காவல்துறையினர் உடனடியாக தூதரக வளாகத்தில் குவிக்கப்பட்டனர். ஆரம்ப கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக ஒரு மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டது.
பின்னர், சந்தேகத்திற்கிடமான அந்த லேப்டாப்பை அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக சினமன் கார்டன்ஸ் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ரஷ்ய தூதரகத்தில் நடந்த இந்த மர்மப் பார்சல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!