அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றில் நேற்று நடந்த ஒரு பயங்கரமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆல்டன், இல்லினாய்ஸ் அருகே, ஆற்றின் மீது பறந்து கொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக ஒரு படகுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மிசிசிப்பி ஆற்றின் ஆல்டன் அணைக்கு அரை மைல் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. ஹெலிகாப்டர் ஒரு மின்சாரக் கம்பியில் மோதியதால், கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் இருந்த படகு ஒன்றின் மீது விழுந்துள்ளது.
விபத்து நடந்தபோது, படகில் யாரும் இல்லை என்று மிசௌரி மாநில நெடுஞ்சாலைத் துறை காவல்துறை தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, ஆற்றின் வணிகப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.