ஜெர்மனியில் விமானப் போக்குவரத்து முடக்கம்!

ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமானப் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்

வெர்டி தொழிற்சங்கத்தின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஹம்பர்க் விமான நிலையத்தில் தொடங்கிய வேலைநிறுத்தம், பின்னர் நாடு முழுவதும் பரவியது. பிராங்பேர்ட், முனிச், பெர்லின் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டனர். ஜெர்மனியின் பரபரப்பான விமான நிலையமான பிராங்பேர்ட்டில் பயணிகள் விமானங்களில் ஏறவும், இணைப்பு விமானங்களில் பயணிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுத்துறை மற்றும் போக்குவரத்து ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெர்டி தொழிற்சங்கம், ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்களுக்கு 8% ஊதிய உயர்வு அல்லது குறைந்தபட்சம் மாதத்திற்கு €350 கூடுதலாக வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரியுள்ளது. ஆனால், இந்த கோரிக்கைகளை முதலாளிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த வேலைநிறுத்தத்தால் 500,000க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,770 பிராங்பேர்ட் விமானங்களில் பெரும்பாலானவையும், 820 முனிச் விமானங்களில் பெரும்பாலானவையும் ரத்து செய்யப்பட்டன. ஹனோவர் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பெர்லின், எசென், கீல் உள்ளிட்ட நகரங்களில் குப்பை சேகரிப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.