இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள சிடோஅர்ஜோ (Sidoarjo) நகரில், ஒரு நூற்றாண்டுப் பழமையான அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி (Al Khoziny Islamic boarding school) கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் பல உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மீட்புக் குழுவினர் மேலும் ஒன்பது உடல்களை மீட்டதால், பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று, மாணவர்கள் பள்ளி மண்டபத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, இந்தக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களில், கிட்டத்தட்ட 50 மாணவர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முதலில் கைகளால் தேடல் நடந்தது. ஆனால் கடந்த வியாழன் அன்று உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படாததால், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த கனரக எந்திரங்கள் மற்றும் ஜாக்ஹேமர்கள் (jackhammers) பயன்படுத்தப்பட்டன.
அதிகாரிகள் தெரிவித்த தகவல்படி, இந்தக் கட்டிடம் முதலில் இரண்டு தளங்கள் மட்டுமே கொண்டது. ஆனால், முறையான அனுமதி இன்றி மேலும் இரண்டு தளங்கள் சேர்க்கப்பட்டதால், பழைய அஸ்திவாரம் கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் சரிந்து விழுந்துள்ளது.
13 வயதுடைய ரிசாலுல் கோயிப் என்ற மாணவன், “தரை நடுங்குவதை உணர்ந்ததும் நான் பிரார்த்தனையை நிறுத்திவிட்டு ஓடினேன். திடீரென கட்டிடம் இடிந்து, மேற்கூரையின் குப்பைகள் என் மீது விழுந்தன. அறையே இருண்டுவிட்டது. ஆனால் ‘இந்த வழியாக, இந்த வழியாக’ என்று யாரோ கத்துவதைக் கேட்டு, வெளிச்சம் தெரியும் ஒரு குறுகிய இடைவெளியைத் தேடி நான் வெளியே வந்தேன்” என்று கூறியுள்ளார்.
மீட்புப் பணிகள் நேற்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.