எகிப்தில் நேற்று முன்தினம் மாபெரும் ரயில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. மட்ரூஹ் மாகாணத்தில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், நடுவழியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் குறைந்தது மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 94-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் மீண்டும் விபத்துக்கள்:
எகிப்தில் ரயில் விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த விபத்து, கடந்த சில ஆண்டுகளில் எகிப்தின் மோசமான ரயில் பாதுகாப்பு வரலாற்றின் ஒரு அத்தியாயமாக மாறியுள்ளது. ரயில்வே அமைப்பு மிகவும் பழமையானதாகவும், மோசமான நிர்வாகத்தாலும் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.
விசாரணைக்கு உத்தரவு!
சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக 30 ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
2021-ல் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது போன்ற தொடர் விபத்துகளைத் தடுக்க, எகிப்து அரசு ரயில்வே அமைப்பை மேம்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த விபத்து, அரசின் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.