போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில், சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் ஃபியூனிகுலர் டிராம் விபத்துக்குள்ளானதில், பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த சோகமான விபத்தில் உயிரிழந்தவர்களில் டிராம் ஓட்டுநரான ஆண்ட்ரே மார்க்ஸ் என்பவர்தான் முதல் பலியானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சமீபத்தில், லிஸ்பனில் உள்ள புகழ்பெற்ற குளோரியா ஃபியூனிகுலர் டிராம் தனது கட்டுப்பாட்டை இழந்து, வேகமாகச் சரிந்து ஒரு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முதலில் 15 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 21 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இந்த விபத்தில் வெளிநாட்டவர்களும் உயிரிழந்துள்ளனர். எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் வெளியிடப்படவில்லை. விபத்து நடந்த இடத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. ஒரு ரயில் பெட்டி கிட்டத்தட்ட முழுவதும் சிதைந்துபோயுள்ளது. பொதுமக்கள் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் காப்பாற்ற கடுமையாகப் போராடினர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டிராமின் பிரேக் செயலிழந்தது அல்லது கேபிள் அறுந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோகமான சம்பவம் போர்த்துகல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.