லண்டன்: பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருடன் தொடர்புடைய சொத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தீ வைப்புத் தாக்குதல்கள் தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீ வைத்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை (Metropolitan Police) தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த வாரம் வட லண்டனில் உள்ள கீர் ஸ்டார்மருடன் தொடர்புடைய இரண்டு குடியிருப்புகள் மற்றும் ஒரு கார் மீது நிகழ்ந்த தொடர்ச்சியான தீ வைப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையது. மே 8 ஆம் திகதி ஒரு கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. மே 11 ஆம் திகதி இஸ்லிங்டனில் (Islington) உள்ள ஒரு கட்டிடத்தின் முன் கதவிலும், மே 12 ஆம் திகதி கீர் ஸ்டார்மர் முன்னர் வசித்த கென்டிஷ் டவுனில் (Kentish Town) உள்ள வீட்டின் கதவிலும் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோமன் லாவ்ரினோவிச் (Roman Lavrynovych) என அடையாளம் காணப்பட்டுள்ள 21 வயது உக்ரைனியப் பிரஜை ஒருவரே இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். தென்கிழக்கு லண்டனில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் வெள்ளிக்கிழமை (மே 16) வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றில் (Westminster Magistrates’ Court) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.