லாகூர் விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து! அனைத்து விமான சேவைகளும் ரத்து!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அனைத்து விமான சேவைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாகிஸ்தான் ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கும் போது அதன் டயர் வெடித்து தீப்பிடித்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த விபத்தின் காரணமாக விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. லாகூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், விமான நிலையத்தில் இருந்த மக்கள் புகைமூட்டத்தால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதை தெளிவாக காண முடிகிறது. 32 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், பயணிகள் இந்த சம்பவம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் கருப்பு புகை மூட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

இருப்பினும், இந்த தீ விபத்தில் இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து பயணிகளிடையே பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விமான சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.