மும்பையின் அதிரடி வெற்றி! ஹைதராபாத் சுருண்டது! புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு (23) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பந்தாடியது. இந்த அபார வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது மட்டுமல்லாமல், புள்ளிப்பட்டியலிலும் அதிரடியாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு 07.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ஒரு கட்டத்தில் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹைதராபாத் அணியை, கிளாசன் மற்றும் அபினவ் மனோகர் ஜோடியின் சிறப்பான இணைப்பாட்டம் மீட்டெடுத்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 71 ஓட்டங்களையும், அபினவ் மனோகர் நிதானமாக ஆடி 37 பந்துகளில் 34 ஓட்டங்களையும் சேர்த்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 144 ஓட்டம் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 46 பந்துகளில் 70 ஓட்டங்களை குவித்து தனது இரண்டாவது தொடர்ச்சியான அரைசதத்தை பதிவு செய்தார். அவருக்கு உறுதுணையாக சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களை எடுத்தார். மும்பை அணி 15.4 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதே நேரத்தில் சொந்த மண்ணில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.