அமெரிக்காவில் புதிய வகை புழு தொற்று: குவாத்தமாலாவில் இருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு!

அமெரிக்காவில் புதிய வகை புழு தொற்று: குவாத்தமாலாவில் இருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு!

குவாத்தமாலாவில் இருந்து அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்திற்கு வந்த ஒருவருக்கு புதிய வகை புழுத் தொற்று (New World screwworm) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு இந்த வகை புழுத் தொற்று ஏற்பட்டிருப்பது, மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்சிகோவில் இருந்து வடக்கே பரவி வரும் சமீபத்திய பாதிப்புகளுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

ஸ்க்ரூவோர்ம் (screwworm) எனப்படும் இந்த புழுக்கள், வெதுவெதுப்பான ரத்தம் கொண்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் உயிருள்ள திசுக்களை உண்டு வாழும் ஈக்களின் புழுக்களாகும் (maggots). இந்த வகை ஈக்கள் திறந்த காயங்கள் அல்லது சளி சவ்வுகளில் முட்டையிடும். முட்டைகள் பொரித்தவுடன், புழுக்கள் சதையின் உள்ளே ஊடுருவி, திசுக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.

தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேரிலாந்தில் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது அரிதானது என்றாலும், இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். அமெரிக்க அதிகாரிகள் மற்றும் விவசாயத் துறையினரின் முக்கிய கவலை, இந்த ஒட்டுண்ணி கால்நடைகளுக்குப் பரவக்கூடும் என்பதுதான். இது பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.