கனடா லிபரல் கட்சிக்கு புதிய ஓட்டு வெற்றி – பெரும்பான்மைக்கு மேலும் நெருக்கம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள ஒரு தொகுதியில் (riding) நடைபெற்ற வாக்கு மறு எண்ணிக்கையில், ஆளும் லிபரல் கட்சி வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஒரு வெற்றியின் மூலம், கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு லிபரல் கட்சி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.  

டெரெபோன் தொகுதியில் நடைபெற்ற நீதித்துறை மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவில், லிபரல் கட்சி வேட்பாளர் டாடியானா அகஸ்டே 23,352 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிளாக் கியூபெக்வா கட்சியைச் சேர்ந்த தற்போதைய உறுப்பினர் நத்தாலி சின்க்ளேர்-டெஸ்காக்னே 23,351 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம், கனடா நாடாளுமன்றத்தின் மக்களவையில் (House of Commons) லிபரல் கட்சியின் ஆசனங்கள் 170 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு 172 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், இன்னும் இரண்டு ஆசனங்கள் பற்றாக்குறையாக உள்ளது.

தனது வெற்றி குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள டாடியானா அகஸ்டே, டெரெபோன் தொகுதி மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்ததுடன், உடனடியாக “பணியைத் தொடங்கப் போவதாகவும்” உறுதியளித்துள்ளார். கனடாவின் தேர்தல் விதிகளின்படி, பதிவான வாக்குகளில் 0.1% க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றால், மறுவாக்கு எண்ணிக்கை கட்டாயமாகும்.  

தேர்தலுக்கு அடுத்த நாள், அதிகாரிகள் ஆரம்பத்தில் டெரெபோன் தொகுதியில் அகஸ்டே வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தனர். ஆனால், தேர்தல் கனடா அமைப்பு வாக்குகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் சரிபார்ப்பு செயல்முறையின் போது (இது மறுவாக்கு எண்ணிக்கை அல்ல), சின்க்ளேர்-டெஸ்காக்னே முன்னிலை பெற்றிருந்தார். கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி டேனியல் டர்கோட் இந்த மறுவாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட்டார்.

சிபிசி செய்தி நிறுவனத்தின்படி, மேலும் மூன்று தொகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த டெரெபோன் தொகுதி வெற்றி, கனடாவில் லிபரல் கட்சிக்கு ஒரு அரசியல் மறுஎழுச்சியாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அக்கட்சி தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதும், அதைத் தொடர்ந்து அவர் கனடாவுடன் தொடங்கிய வர்த்தகப் போரும், ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற கனடா தேர்தலை, அமெரிக்காவுடனான உறவை நாட்டின் தலைமைத்துவம் எவ்வாறு கையாளும் என்பதற்கான ஒரு பொது வாக்கெடுப்பாக மாற்றியது.

பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆசனங்களை வென்றாலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெற மூன்று ஆசனங்கள் குறைவாக இருந்தன.

தற்போதைய நிலவரப்படி, கன்சர்வேடிவ் கட்சி 144 ஆசனங்களையும், பிளாக் கியூபெக்வா 21 ஆசனங்களையும், என்.டி.பி (புதிய ஜனநாயகக் கட்சி) ஏழு ஆசனங்களையும், பசுமைக் கட்சி ஒரு ஆசனத்தையும் கொண்டுள்ளன.