பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தகவல்களை இணையத்தில் பரப்பியதாகக் கூறி பாகிஸ்தானுக்குச் சொந்தமான 16 யூடியூப் அலைவரிசைகளுக்கு இந்திய அரசாங்கம் அதிரடியாக தடை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் பலியான கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களுக்குள்ளாகவே உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்களின் பட்டியலில் ஜியோ நியூஸ், டான், ரஃப்தார், போல் நியூஸ், ஏஆர்ஒய் நியூஸ், சமா டிவி, சுனோ நியூஸ் போன்ற பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கங்களும் அடங்கும். மேலும், முனீப் ஃபரூக், உமர் சீமா, அஸ்மா ஷிராசி மற்றும் இர்ஷாத் பாட்டி போன்ற பிரபல பாகிஸ்தான் ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட யூடியூப் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, 3.5 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரின் யூடியூப் சேனலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை பாகிஸ்தானிய ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த தடை பார்க்கப்படுகிறது. இந்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.