பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்! நடுநிலை விசாரணைக்கு தயார்! பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் அபாயகரமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தாம் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அதிரடியாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், பஹல்காமில் நடந்த துயர சம்பவம் பழி சுமத்தும் மற்றொரு உதாரணமாகும் என்றும், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். முன்னதாக, எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தாம் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜ் முகம்மது ஆசிஃப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தலைவர்களின் இந்த திடீர் அறிவிப்பு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தை தணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், இந்தியா இந்த அறிவிப்பை எப்படி பார்க்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.