ஆஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீன இயக்குநர் கைது!

ஆஸ்கார் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஹம்தான் பல்லால், இஸ்ரேல் குடியேறிகளுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே வெடித்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ‘நோ அதர் லேண்ட்’ என்ற ஆவணப்படத்தின் நான்கு இயக்குநர்களில் ஒருவரான பல்லால், திங்கள்கிழமை சுசியா கிராமத்தில் நடந்த தாக்குதலின் போது தனது வீடு குடியேறிகளால் சூழப்பட்டதாக ஐந்து யூத அமெரிக்க செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இணை இயக்குநர் யுவால் ஆபிரகாம், பல்லால் தாக்கப்பட்டு படையினரால் ஆம்புலன்ஸில் இருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், இதை இஸ்ரேல் மறுத்துள்ளது. ஐடிஎஃப், பல்லாலின் பெயரைக் குறிப்பிடாமல், பாதுகாப்புப் படைகள் மீது “கல் எறிந்ததாக” சந்தேகிக்கப்படும் மூன்று பாலஸ்தீனர்களும் ஒரு இஸ்ரேலியரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.

செயற்பாட்டாளர்கள், சுமார் ஒரு டஜன் முகமூடி அணிந்த குடியேறிகள் திங்கள்கிழமை மாலை சுசியாவில் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்கள் சம்பவத்தை ஆவணப்படுத்த கிராமத்திற்குச் சென்றபோது தங்களுக்கும் தாக்குதல் நடந்ததாகவும் தெரிவித்தனர். குடியேறிகள் அவர்களின் கார் ஜன்னல்களை உடைத்ததோடு, குச்சிகளால் அடித்ததாகவும் கூறினர். பல்லாலின் வீடு குடியேறிகளால் சூழப்பட்டதாகவும், தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும், சொத்துகள் சேதமடைந்ததாகவும் ஆபிரகாம் தெரிவித்தார்.

97வது அகாடமி விருதுகளில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்ற ‘நோ அதர் லேண்ட்’, 20 கிராமங்களைக் கொண்ட மசாஃபர் யட்டா பகுதியில் நடந்த போராட்டத்தையும், ஆத்ரா மற்றும் ஆபிரகாம் இடையேயான நட்பையும் பின்தொடர்கிறது. 1967 முதல் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி இஸ்ரேலிய குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என்றாலும், இஸ்ரேல் இதை ஏற்கவில்லை. 2023ல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததிலிருந்து, மேற்குக் கரையில் பாலஸ்தீன பொதுமக்கள் மீதான குடியேறி வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளது.