மீண்டும் நடுவானில் விமானம் நொறுங்கி விபத்து: 50 பேர் பலி!
ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் நடந்த பயங்கர விமான விபத்து ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது! சுமார் 50 பேருடன் வானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று திடீரென மாயமாகி, நொறுங்கி விழுந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்காரா ஏர்லைன்ஸ் (Angara Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான An-24 ரக பயணிகள் விமானம், சுமார் 43 பயணிகளையும் (இதில் 5 குழந்தைகள்!), 6 விமான ஊழியர்களையும் சுமந்துகொண்டு, அமூர் பிராந்தியத்தில் உள்ள டின்டா (Tynda) நகரத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக விமானம் ராடார் திரைகளில் இருந்து முற்றிலும் மாயமானது.
இதையடுத்து, அவசர மீட்புப் படையினர் விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வனப்பகுதி ஒன்றில் விமானத்தின் எரிந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் பெரும் தீ பரவியிருந்ததாகவும், உயிருடன் யாரும் தென்படவில்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையிலான தகவல்களின்படி, விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்ற கருத்தே மேலோங்கியுள்ளது.
மோசமான வானிலை, குறைந்த பார்வைத் திறன், மற்றும் விமானியின் தவறு ஆகியவையே இந்த பயங்கர விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த துயர சம்பவம் குறித்து ரஷ்ய அரசு உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விபத்து ரஷ்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.