துபாயில் இருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் இருந்து விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமான நிலையத்தைச் சேர்ந்த தரைப்பணி ஊழியர்கள் இருவர் பலியாகினர்.
துருக்கியை தளமாகக் கொண்ட ஏ.சி.டி ஏர்லைன்ஸ் (ACT Airlines) நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் இந்த போயிங் 747 ரக சரக்கு விமானம், அதிகாலை 3:50 மணியளவில் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் இருந்து விலகி, அருகில் உள்ள கடல் சுவரை உடைத்துக்கொண்டு கடலுக்குள் பாய்ந்தது.
விமானம் விலகிச் சென்றபோது, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களின் வாகனத்தின் மீது மோதி, அந்த வாகனத்தையும் கடலுக்குள் தள்ளியது.
வாகனத்தில் இருந்த இரண்டு பாதுகாப்பு ஊழியர்களும் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விமானத்தில் எந்த சரக்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காரணமாக விமான நிலையத்தின் வடக்குப் பகுதி ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து விசாரணை ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.