நேபாளத்தில் பற்றி எரியும் போராட்டம்; இடைக்கால பிரதமர் ஆக சுஷிலா கார்க்கிக்கு அழைப்பு!

நேபாளத்தில் பற்றி எரியும் போராட்டம்; இடைக்கால பிரதமர் ஆக சுஷிலா கார்க்கிக்கு அழைப்பு!

இமயமலை தேசமான நேபாளம் பற்றி எரிகிறது! இளைஞர்களின் மாபெரும் போராட்டத்தால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த மக்கள் புரட்சியால் பிரதமர் சர்மா ஒலி மற்றும் அதிபர் ராம் சந்திர பவுடல் இருவரும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், நாடு ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வன்முறைத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்குத் தீ வைத்துள்ளனர். நாட்டின் முக்கிய பகுதிகள் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்கள் மூடப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், நேபாளத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க, போராட்டக்காரர்கள் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கியை இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்க்கி, நேர்மை மற்றும் துணிச்சலுக்கு பெயர் பெற்றவர். இளைஞர்களின் இந்தப் புதுமையான கோரிக்கை, நேபாளத்தின் அரசியல் அரங்கில் ஒரு பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. மக்கள் விரும்பினால் இடைக்கால அரசை வழிநடத்த தான் தயாராக இருப்பதாக சுசீலா கார்க்கியும் சம்மதம் தெரிவித்துள்ளதால், நேபாளத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நாடு வன்முறையில் இருந்து மீண்டு அமைதி திரும்புமா, அல்லது மேலும் பதற்றம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பில் நேபாளம் தவித்துக்கொண்டிருக்கிறது.