உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த சூழலில், லிதுவேனியாவின் வான் எல்லைக்குள் ரஷ்யாவின் டிரோன் ஒன்று நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக லிதுவேனியா நேட்டோ அமைப்பிடம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. லிதுவேனியா வெளியுறவுத்துறை அமைச்சர் கெஸ்டூடிஸ் புட்ரிஸ், கடந்த மாதம் லிதுவேனிய வான்வெளியில் ரஷ்யாவின் இராணுவ டிரோன் ஊடுருவியதாகவும், இது போன்ற சம்பவம் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, லிதுவேனியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேட்டோ படைகளின் கிழக்குப் பகுதி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நேட்டோ தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறியுள்ளார். டிரோன் ஊடுருவல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த டிரோனில் வெடிபொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது விபத்து காரணமாக லிதுவேனிய வான்வெளிக்குள் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நேட்டோ அமைப்பு உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. லிதுவேனியா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.