உக்ரைனின் வடக்கு பிராந்தியமான சுமியில் (Sumy) உள்ள ஷோஸ்ட்கா (Shostka) ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை குறிவைத்து ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் (Drone Strike) ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையம். இந்த நிலையம் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 50 கி.மீ. (30 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பயணிகளாகவும், ரயில்வே ஊழியர்களாகவும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ரயில்களில் ஒன்று ஷோஸ்ட்காவிலிருந்து தலைநகர் கீவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஆகும்.
தாக்குதலுக்குப் பிறகு ரயிலின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததற்கான புகைப்படங்களையும், சேதமடைந்த பெட்டிகளின் வீடியோக்களையும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
இது ஒரு “கொடூரமான” தாக்குதல் என்றும், ரஷ்யா பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது ‘பயங்கரவாதம்’ என்றும் அதிபர் ஸெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக உக்ரைனின் ரயில்வே உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா கிட்டத்தட்ட தினமும் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா தொடர்ந்து பொதுமக்களின் மின்சாரம் மற்றும் எரிவாயு நிலையங்களையும் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பிராந்திய ஆளுநர் ஒலெக் ஹ்ரிகோரோவ் (Oleh Hryhorov) தெரிவித்துள்ளார்.