interstellar object produces its own light:பூமியை நோக்கி வரும் இன்டர்- ஸ்டெல்லர் கல்லில் வெளிச்சம் இருப்பது எப்படி ?

interstellar object produces its own light:பூமியை நோக்கி வரும் இன்டர்- ஸ்டெல்லர் கல்லில் வெளிச்சம் இருப்பது எப்படி ?

ஹார்வர்டு பல்கலைக்கழகம்: நம் சூரிய குடும்பத்தின் வழியாக வேகமாகப் பயணிக்கும் ஒரு மர்மமான விண்வெளிப் பொருள், வேற்றுகிரக விண்கலமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்வெளிப் பொருள், ‘3I/ATLAS’ என்று அழைக்கப்படுகிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியலாளர் அவி லோப் (Avi Loeb) இந்த மர்மமான பொருளைக் குறித்துக் கூறுகையில், “இந்த விண்கல் தனது சொந்த ஒளியை உருவாக்குவது போலத் தெரிகிறது. இது ஒரு வாகனம் தனது ஹெட்லைட்டைப் போட்டுக்கொண்டு வருவது போல இருக்கிறது. ஆனால் இந்த ஒளியின் ஆதாரம் இதுவரை மர்மமாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஒரு வானியலாளர் எடுத்த புகைப்படத்தில், இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அந்தப் புகைப்படத்தில், 3I/ATLAS-லிருந்து வெளிப்படும் ஒளி, சூரியனை நோக்கியுள்ள அதன் ஒரு பக்கத்தில் மட்டுமே பிரகாசமாகத் தெரிந்தது. இது ஏதோ ஒரு ஒளிக்கற்றையாகவோ அல்லது விண்கல்லின் முழு மேற்பரப்பையும் ஒரே சீராக ஒளிரச் செய்யும் ஒளியாகவோ இல்லாமல், குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ஒளிரும் பகுதியாக இருந்தது.

இத்தனை நாட்களாக, இந்த வேகமான பொருள் 12 மைல் நீளமுள்ள ஒரு பிரம்மாண்டமான வால் நட்சத்திரம் என்றுதான் பெரும்பாலான அறிவியலாளர்கள் நம்பினர். இது வரும் டிசம்பர் 17 அன்று பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.

புதிய ஆய்வறிக்கை ஒன்றில், பேராசிரியர் லோப், இந்த ஒளி விண்கல்லின் மேற்பரப்பிலிருந்து சூரிய வெப்பத்தால் உருவாகும் தூசியால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு விளக்கத்தை முன்வைத்தார். ஆனால், இந்த ஒளியின் பிரகாசம் தூரத்திற்கு ஏற்ப வேகமாகக் குறைவதாகத் தெரிவித்துள்ளார். இது சாதாரண வால் நட்சத்திரங்களின் இயல்புக்கு முற்றிலும் முரணானது.

பேராசிரியர் லோபின் கூற்றுப்படி, இந்த அசாதாரணமான ஒளி, 3I/ATLAS ஒரு செயற்கைப் பொருளாக (artificial) இருக்கக்கூடும் என்பதற்கான மற்றொரு சான்றாக அமைந்துள்ளது. பல மில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தும் காணக்கூடிய ஒளியை உருவாக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆற்றல் மூலம் அதற்குள் இருக்கலாம் என்றும் அவர் சந்தேகித்துள்ளார். இந்த மர்மமான பொருள், உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகளின் தொழில்நுட்பமாக இருக்குமா என்பது குறித்து, உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.