ஆபரேஷன் சிந்தூர்! பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா! நெஞ்சை உருக்கும் பதிலடி!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) ஒன்பது பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயர் சூட்டப்பட்டதன் பின்னணியில் ஒரு நெஞ்சை உருக்கும் சோகக் கதை உள்ளது. “சிந்தூர்” அல்லது குங்குமம் என்பது திருமணமான இந்துப் பெண்களின் அடையாளமாகும். கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நிகழ்ந்த கொடூரமான படுகொலையில், புதிதாக திருமணமானவர்கள் உட்பட இந்து ஆண்கள் குறிவைத்து பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு இப்பெயர் சூட்டப்பட்டது, பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை உணர்த்தும் ஒரு குறியீடாக அமைந்தது.

எல்லை தாண்டிய இந்த துல்லியமான தாக்குதல்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக அதிகாலை நேரத்தில் நடத்தப்பட்டன. பாகிஸ்தான் மற்றும் POK இல் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. “சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கின. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கியது. அங்கிருந்துதான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன. மொத்தம் ஒன்பது தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன,” என்று இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், பைசரனில் உள்ள புல்வெளியில், இந்து ஆண்களைத் தனியாக பிரித்து, மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றனர். தேனிலவுக்காக வரும் புதுமணத் தம்பதிகள் அதிகம் வருகை தரும் இடம் பஹல்காம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களின் துயரத்தை மனதில் கொண்டு, இந்த பதிலடி இராணுவ நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று குறியீட்டுப் பெயர் சூட்டியது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹரியானாவைச் சேர்ந்த ஹிமான்ஷி நர்வால், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஷான்யா திவேதி, குஜராத்தைச் சேர்ந்த ஷிதல் கலாதியா, காஜல்பென் பர்மர், கொல்கத்தாவைச் சேர்ந்த சோஹினி அதிகாரி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரகதி ஜக்டேல், கேரளாவைச் சேர்ந்த ஷீலா ராமச்சந்திரன், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெனிபர் நதானியேல், ஜெயா மிஸ்ரா ஆகியோரின் கணவர்கள் அந்த கோரத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாக்குதலுக்குப் பின்னர் திருமணமாகி ஆறு நாட்களே ஆன ஹிமான்ஷி நர்வால், தனது கணவரும் கடற்படை அதிகாரியுமான லெப்டினன்ட் வினய் நர்வாலின் உடலுக்கு அருகில் கதறி அழுத காட்சி அனைவரின் மனதையும் உலுக்கியது. அவர்தான் இந்த துயரத்தின் உருவமாக மாறினார். சில நாட்களுக்குப் பின்னர், ஹிமான்ஷி தனது கணவருக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, திருமணமான இந்துப் பெண்களின் நெற்றியில் பிரகாசிக்கும் குங்குமம் இல்லாமல் வெறித்துப் போய் நின்றார். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்தால் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் கண்ணீருக்கு இந்தியா செலுத்திய கண்ணீர் அஞ்சலியாகும்.