இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மொகாமா நகரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது! பள்ளி மதிய உணவில் இறந்த பாம்பு கிடந்ததை சாப்பிட்டதால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமைத்தவர் உணவில் இருந்து இறந்த பாம்பை அகற்றிய பிறகும், அந்த உணவை குழந்தைகளுக்கு பரிமாறியதாக கூறப்படுகிறது. சுமார் 500 குழந்தைகளுக்கு இந்த விஷம் கலந்த உணவு பரிமாறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
குழந்தைகள் அடுத்தடுத்து வாந்தி எடுக்கவும், மயக்கம் அடையவும் தொடங்கியதும், ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். “இந்த செய்தியின் உள்ளடக்கங்கள் உண்மையென்றால், மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்ட ஒரு தீவிரமான பிரச்சினை இது என்று ஆணையம் கருதுகிறது,” என்று NHRC தெரிவித்துள்ளது. மேலும், “குழந்தைகளின் உடல்நிலை” உட்பட விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் மூத்த அரசு அதிகாரிகளிடம் இருந்து ஆணையம் கோரியுள்ளது.
ஏழை பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளுக்காக 1925 ஆம் ஆண்டு சென்னையில் (மெட்ராஸ்) முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச பள்ளி உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான இது, பசியை எதிர்த்துப் போராடுவதற்கும், பள்ளி வருகையை அதிகரிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், உணவு சுகாதாரமின்மை குறித்து பல புகார்கள் வந்துள்ளன.
முன்னதாக 2013 ஆம் ஆண்டில், பீகார் மாநிலத்தில் விஷம் கலந்த உணவு சாப்பிட்டதால் 23 பள்ளி குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விஞ்ஞான சோதனைகளில் பூச்சிக்கொல்லியின் “மிகவும் நச்சு” அளவுகள் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது மீண்டும் ஒரு கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.