அதிபர் மேக்ரான் பதவி விலக கடும் அழுத்தம்: பிரான்ஸில் வெடித்தது அரசியல் பூகம்பம்!

அதிபர் மேக்ரான் பதவி விலக கடும் அழுத்தம்: பிரான்ஸில் வெடித்தது அரசியல் பூகம்பம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் அரசியல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது. அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) மீது, தன் அரசியல் சகாக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எனப் பல தரப்பிலிருந்தும் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

குறைந்த கால பிரதமர்கள்! – ஒரு நாள் ஆட்சி!

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், பிரான்ஸில் ஐந்து பிரதமர்கள் மாறி உள்ளனர். அதிபரின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் கூட, பதவியேற்ற 14 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்! நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், அரசின் முடிவுகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

  • கடன் சுமை: பிரான்ஸின் கடன் சுமை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்ய முடியாமல் அரசு தவிக்கிறது.
  • பொருளாதார நெருக்கடி: அரசியல் நிச்சயமற்ற தன்மையால், பிரான்ஸ் பங்குச் சந்தை சரிந்துள்ளது. நாட்டைக் கேலிப்பொருளாக மற்றிவிட்டதாக பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

நண்பரே போட்ட ‘பாம்’! 

மேக்ரானின் நெருங்கிய அரசியல் கூட்டாளிகள் மற்றும் முன்னாள் பிரதமர்கள் கூட இப்போது அவருக்கு எதிராகத் திரும்பி உள்ளனர்.

  • மேக்ரானின் முதல் பிரதமரான எட்வார்ட் பிலிப் (Edouard Philippe), “இந்த அரசியல் குழப்பம் நாட்டுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கிறது. நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க, மேக்ரான் பதவியை விட்டு விலகிச் செல்ல வேண்டும்” என்று பகிரங்கமாகக் கூறியது அரசியல் வட்டாரத்தில் குண்டைத் தூக்கிப் போட்டது!

இரண்டு வாய்ப்புகள்!

தற்போது மேக்ரானுக்கு இரண்டு முக்கிய தேர்வுகள் மட்டுமே உள்ளன:

  1. பதவி விலகுதல்: நாட்டு மக்களின் நலனுக்காக அவர் தாமாகவே முன்வந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்வது.
  2. நாடாளுமன்றத்தைக் கலைத்தல்: மீண்டும் ஒரு அவசர நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, புதிய ஆட்சி அமைக்க வழி செய்வது.

ஆனால், அவர் தன் பதவிக்காலம் முடியும் 2027 வரை தொடர விரும்புவதாகவும், குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்கத் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் அரசியல் நிலைமை எப்போது சீராகும்? குழப்பத்தை நீக்க மேக்ரான் என்ன முடிவு எடுப்பார்? உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன!

Loading