உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தாரலி கிராமத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம் இமயமலைக்கு அருகில் அமைந்துள்ளதால், கனமழை மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்வது வழக்கம். இந்த நிலையில், காலை முதல் உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்தரகாசி மாவட்டம் தாரலி கிராமத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு, குறுகிய நேரத்தில் அதிக மழையை ஏற்படுத்தி, வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று மதியம் சுமார் 1.40 மணியளவில் மலையில் இருந்து வேகமாகப் பாய்ந்த வெள்ளம், தாரலி கிராமத்திற்குள் புகுந்து கட்டடங்களைச் சேதப்படுத்தியது. மண் மற்றும் பாறைகளுடன் வந்த இந்த வெள்ளத்தில் சிக்கி கிராம மக்கள் பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்குக்கு முக்கிய காரணம் கங்கோத்ரி தாம் அருகே ஏற்பட்ட மேகவெடிப்புதான் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கங்கோத்ரி தாம் நகருக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “தாரலி கிராமத்தில் நடந்த சம்பவம் கவலையளிக்கிறது. மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.