தாய்லாந்து அரசியல் மீண்டும் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளது. அந்நாட்டின் பிரதமர் பேயோங்தான் ஷினாவத்ரா (Paetongtarn Shinawatra), ஒரு தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஏற்பட்ட ஒழுக்க மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்திருந்த நேரத்தில், பேயோங்தான், கம்போடியாவின் முன்னாள் தலைவரான ஹுன் சென்னுடன் (Hun Sen) தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த உரையாடலின்போது, அவர் தாய்லாந்து ராணுவ அதிகாரியை விமர்சித்ததாகவும், ஹுன் சென்னுக்கு பணிந்து நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த உரையாடல் கசிந்த நிலையில், இது தேசிய நலன்களுக்கு எதிரானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து, பேயோங்தான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.
பேயோங்தான் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து, தாய்லாந்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப் போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது.
பேயோங்தான், முன்னாள் பிரதமர்களான தாக்சின் ஷினாவத்ரா (Thaksin Shinawatra) மற்றும் யிங்லக் ஷினாவத்ரா (Yingluck Shinawatra) ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த 20 ஆண்டுகளில், ஷினாவத்ரா குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது பிரதமர் நீதிமன்றத் தீர்ப்பு அல்லது ராணுவப் புரட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, துணைப் பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் (Phumtham Wechayachai) தலைமையில் ஒரு தற்காலிக அரசு செயல்படும்.
தாய்லாந்தில் ராணுவம் மற்றும் நீதித்துறை ஆகியவை அரசியல் முடிவுகளில் தொடர்ந்து தலையிடுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தத் தீர்ப்பு நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.