சிட்னி:
ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள், 17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெரிய பறவையின் எலும்பு படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த படிமம், நவீன லையர்பேர்ட் (lyrebird) பறவையின் மூதாதையர் என்று நம்பப்படுகிறது. இந்த அரிய கண்டுபிடிப்பு, பறவைகளின் பரிணாம வளர்ச்சி குறித்த பல ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கண்டுபிடிப்பின் பின்னணி!
குயின்ஸ்லாந்தில் உள்ள பூட்ஜாமுல்லா தேசிய பூங்காவில் உள்ள ரிவர்ஸ்லீ உலகப் பாரம்பரிய அகழ்வாராய்ச்சி தளத்தில், இந்த படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இது, மெனுரா தயவானோயிட்ஸ் (Menura tyawanoides) என்ற இனத்தைச் சேர்ந்த பறவையின் மணிக்கட்டு எலும்பு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த பறவை, இன்றைய லையர்பேர்ட் பறவை இனத்தின் மிக நெருங்கிய உறவினர் என்றும், இது ஆஸ்திரேலியாவின் தனித்துவமான பறவைகளின் பரிணாம வேர்கள் எவ்வளவு ஆழமானது என்பதைக் காட்டுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பறக்கத் தெரியாத ராட்சதப் பறவை!
கண்டுபிடிக்கப்பட்ட மணிக்கட்டு எலும்பு படிமத்தின் மூலம், இந்த அரிய பறவை இனம் பெரியதாகவும், தரைவாழ் பறவையாகவும், பறக்கும் திறன் குறைந்ததாகவும் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மெனுரா தயவானோயிட்ஸ் என்ற இந்த பறவை இனம், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் இருந்த அடர்ந்த, தாழ்நில வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ரிவர்ஸ்லீயின் ரகசியம்!
ரிவர்ஸ்லீ உலகப் பாரம்பரிய தளம், உலகின் மிக முக்கியமான தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்களில் ஒன்றாகும். இந்த புதிய கண்டுபிடிப்பு, “கடந்த காலத்திற்கான ஒரு சாளரம்” என்று புகழப்படுகிறது. இந்த தளம், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உயிரினங்களைப் பற்றி அறிய ஒரு அரிய வாய்ப்பை அளிக்கிறது.