கஜிகி புயல் வியட்நாமை நெருங்குவதால், 5,86,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்ற உத்தரவு
வியட்நாமில் கஜிகி புயல் நெருங்கி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5,86,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.
மணிக்கு 166 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தாங் ஹோவா, குவாங் ட்ரி, ஹியூ மற்றும் டா நாங் ஆகிய மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படகுகள் கரையில் ஒதுங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புயல் சீனாவில் உள்ள ஹெய்னான் பகுதியை கடந்து வருவதாகவும், அங்கு 320 மி.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்றும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிபிசி வானிலை ஆய்வு மையத்தின்படி, கஜிகி புயல் வியட்நாமுக்குள்ளே நுழைந்த பிறகு வலு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், 300 – 400 மி.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு (GMT) பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
“தற்போதுள்ள நிலைமை மிகவும் ஆபத்தானது. சுற்றுலாப் படகுகள், மீன்பிடி படகுகள் போன்ற எந்தவொரு வாகனத்திற்கும் அல்லது கட்டுமானத்திற்கும் பாதுகாப்பானது இல்லை” என்று வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வியட்நாம் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரு தினங்களில் மத்திய நகரங்களுக்குச் செல்லும் குறைந்தது 22 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், யாகி புயலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில், வியட்நாமில் மட்டும் 300 பேர் உயிரிழந்தனர். அதேபோன்று இந்தப் புயலும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.