பிரிட்டனின் பிரம்மாண்ட படை நகர்வு! உலக அரங்கில் பலப்பரீட்சை!

பிரிட்டன் கடற்படையின் அதிநவீன போர் கப்பல் அணி, “அட்லாண்டிக் முதல் பசிபிக் வரை பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை நிலைநிறுத்தும்” நோக்கில் எட்டு மாத கால பயணத்தை தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆபரேஷன் ஹைமாஸ்ட்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், விமானம் தாங்கி கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மற்றும் வான் பாதுகாப்பு அழிக்கும் கப்பலான HMS டான்ட்லெஸ் ஆகியவற்றுடன் 1,600 கடற்படை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த கப்பல்கள் அட்லாண்டிக்கில் இருந்து பசிபிக் வரை டிசம்பர் மாதம் வரை பயணிக்கும். மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளின் கடற்படை கூட்டாளிகளுடன் தொடர்ச்சியான கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும். இந்த நடவடிக்கையின் தளபதி கொமோடோர் ஜேம்ஸ் பிளாக்மோர் கூறுகையில், இந்த பயணம் பிரிட்டன் உள்நாட்டில் பாதுகாப்பாகவும், வெளிநாட்டில் வலுவாகவும் உள்ளது என்பதையும், நட்பு நாடுகளின் பிராந்தியங்களில் பாதுகாப்பை பராமரிக்க பன்முகப் பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்க தயாராக உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தும் என்றார். “உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம், ஆபரேஷன் ஹைமாஸ்ட் நம்பகமான தடுப்பு மற்றும் நேட்டோ மற்றும் விதி அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு எங்கள் ஆதரவை நிரூபிக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த போர் கப்பல் அணி தனது முதல் பெரிய அளவிலான பயணத்தை 2021 இல் HMS குயின் எலிசபெத் தலைமையில் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டாளிகளுடன் கைகோர்க்கும் பிரிட்டன்: சர்வதேச பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த பயணம் நேட்டோ மற்றும் அதன் அமைதி காக்கும் முயற்சிகளுக்கான பிரிட்டனின் உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தும். பிரிட்டன் முதன்முறையாக பிரான்ஸுடன் இணைந்து வான் பாதுகாப்பு திறன்களை சோதிக்கும் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது. பின்னர் இத்தாலிய ஆயுதப் படைகள் தலைமையிலான போர் கப்பல் அணியுடன் இணைந்து செயல்படும். அதன் பிறகு செங்கடல் வழியாக மேற்கு நோக்கி பயணிக்கும். இந்த அணியில் நார்வே, கனடா மற்றும் ஸ்பெயின் நாடுகளின் கடற்படைகளும் இணைந்து கொள்ளும். இந்த அணி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அடையும்போது சுமார் 4,500 வீரர்கள் வரை இதில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட படை நகர்வு உலக அரங்கில் பிரிட்டனின் இராணுவ பலத்தை பறைசாற்றுவதோடு, அதன் நட்பு நாடுகளுக்கு ஒரு வலுவான செய்தியையும் அனுப்புகிறது.