வெனிசுலாவின் கடலோரத்தில் அமெரிக்காவின் எஃப்-35 (F-35) போர் விமானங்கள் காணப்பட்டதற்கு வெனிசுலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெனிசுலா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் போர் விமானங்கள் “சட்டவிரோதமாக ஊடுருவி”, நாட்டின் “பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்” விடுப்பதாகவும், “ராணுவ ரீதியான அச்சுறுத்தல்” ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
வெனிசுலாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் விளாடிமிர் பட்ரினோ (General Vladimir Padrino), குறைந்தது ஐந்து எஃப்-35 போர் விமானங்கள் தங்களது வான்பாதுகாப்பு அமைப்புகளால் கண்டறியப்பட்டதாகவும், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளார்.
கரீபியன் கடலுக்கு அருகில் இந்த விமானங்கள் பறந்தது “அநாகரிகம், ஒரு ஆத்திரமூட்டல் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தல்” என்று அவர் கண்டித்துள்ளார். அமெரிக்காவின் போர்ச்செயலாளர் (Secretary of War) பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) உடனடியாக தனது பொறுப்பற்ற மற்றும் போரைத் தூண்டும் நிலைப்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வெனிசுலா வலியுறுத்தியுள்ளது.
இந்த அமெரிக்க விமானங்கள் வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து சுமார் 75 கிமீ (46.6 மைல்) தொலைவில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், கரீபியன் கடலில் விமானப் போக்குவரத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் வெனிசுலா கூறியுள்ளது.
அமெரிக்கா கரீபியன் பகுதியில் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதாகக் கூறி போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது ஆட்சி மாற்றத்திற்கான மறைமுக முயற்சியே என்று வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ (Nicolas Maduro) குற்றம் சாட்டியுள்ளார்.