ஈரானின் எண்ணெய் வலையமைப்பை குறிவைத்து அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளை ஈரான் வெளியுறவு அமைச்சகம் நேற்று புதன்கிழமை கடுமையாக கண்டித்துள்ளது. மூன்றாவது சுற்று அணு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வாஷிங்டனின் “விரோதமான அணுகுமுறையின் அடையாளம்” என்று ஈரான் இந்த நடவடிக்கையை சாடியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாஇல் பாகாயி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிய மக்கள் மீது தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் கொள்கை, “அமெரிக்காவின் உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையுடன் தெளிவான முரண்பாட்டை கொண்டுள்ளது. மேலும் இது இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நல்லெண்ணம் மற்றும் தீவிரத்தன்மை இல்லாமையை காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, அமெரிக்க கருவூலம் ஈரானிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) தொழிலதிபர் சையத் அசாடூல்லா எமாம்ஜோமே மற்றும் அவரது நிறுவன வலையமைப்பின் மீது தடைகளை விதித்தது. இந்த வலையமைப்பு “நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரானிய LPG மற்றும் கச்சா எண்ணெயை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்புவதற்கு கூட்டாக பொறுப்பாகும்” என்று அமெரிக்க கருவூலம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. “எமாம்ஜோமே மற்றும் அவரது வலையமைப்பு அமெரிக்கா உட்பட ஆயிரக்கணக்கான LPG ஏற்றுமதிகளை அமெரிக்க தடைகளைத் தவிர்த்து ஈரானுக்கு வருவாய் ஈட்டுவதற்காக மேற்கொண்டனர்,” என்று கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். “பிராந்தியத்திலும் உலக அளவிலும் ஈரான் ஆட்சி தனது ஸ்திரத்தன்மையற்ற நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கத் தேவையான நிதியை வழங்க முயல்பவர்களை பொறுப்பேற்க வைப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.”
இந்த தடைகள் தெஹ்ரானும் வாஷிங்டனும் ஏப்ரல் 12 முதல் மஸ்கட் மற்றும் ரோமில் இரண்டு சுற்று மறைமுக அணு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் வந்துள்ளன. ஜனவரியில் மீண்டும் பதவியேற்றதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானுக்கு எதிராக தனது “அதிகபட்ச அழுத்தம்” கொள்கையின் கீழ் கடுமையான தடைகளை மீண்டும் விதித்துள்ளார். மார்ச்சில், அவர் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததுடன், ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எச்சரித்தார்.
மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த சனிக்கிழமை ஏப்ரல் 26 அன்று மீண்டும் மஸ்கட்டில் நடைபெறும் என்று ஓமன் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை, ஈரான் இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப, நிபுணர் அளவிலான அணு சந்திப்பு ஒன்றும் சனிக்கிழமை பேச்சுவார்த்தையுடன் இணைந்து நடைபெறும் என்று அறிவித்தது. கடந்த சனிக்கிழமை ரோமில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி அந்த சந்திப்பு “நல்லது” என்றும், பேச்சுவார்த்தைகள் “முன்னேறி வருகின்றன” என்றும் கூறினார். திங்களன்று, டிரம்ப் ஈரான் தொடர்பாக வாஷிங்டன் “மிகவும் நல்ல சந்திப்புகளை” நடத்தியதாக தெரிவித்தார். அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஈரான் அணு ஆயுதங்களை பெற முயல்வதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன. தெஹ்ரான் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. தனது அணுசக்தி திட்டம் அமைதியான சிவில் நோக்கங்களுக்காக மட்டுமே என்று ஈரான் வலியுறுத்துகிறது.