வாட்ஸ்அப்பில் பெரும் வேட்டை! ஒரே அடியில் 6.8 மில்லியன் கணக்குகள் முடக்கம்!

வாட்ஸ்அப்பில் பெரும் வேட்டை! ஒரே அடியில் 6.8 மில்லியன் கணக்குகள் முடக்கம்!

சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சுமார் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மோசடி தொடர்புடைய கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தக் கணக்குகள் அனைத்தும் மோசடி கும்பல்களுடன் தொடர்புடையவை என மெட்டா கண்டறிந்துள்ளது. குறிப்பாக, பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கோரும் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் செய்திகள் குறித்து பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மெட்டா அறிவுறுத்தியுள்ளது.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பரிசு விழுந்ததாகக் கூறி பணம் கேட்பது, உடனடி வேலை வாய்ப்பு என பல்வேறு வழிகளில் மோசடிகள் நடைபெறுவதை மெட்டா அடையாளம் கண்டுள்ளது. இந்த மோசடி கும்பல்கள், பெரும்பாலும் பயனர்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, பணத்தையும், தகவல்களையும் திருட முயற்சிக்கின்றன.

மெட்டா நிறுவனம், மோசடிகளைத் தடுக்க புதிய பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகமில்லாத நபர் ஒரு குழுவில் சேர்த்தால், அது குறித்த விவரங்கள் மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் காண்பிக்கப்படும். இதன் மூலம், பயனர்கள் அக்குழுவில் சேரலாமா, வேண்டாமா என முடிவு செய்யலாம். மேலும், அறிமுகமில்லாத நபருடன் உரையாடலைத் தொடங்கும் முன் எச்சரிக்கை அளிக்கும் அம்சத்தையும் சோதனை செய்து வருகிறது.

எனவே, வாட்ஸ்அப் பயனர்கள் தெரியாத எண்களில் இருந்து வரும் செய்திகளுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என மெட்டா கேட்டுக்கொண்டுள்ளது.