WWF”ஹல்க்மேனியா”ஜாம்பவான் ஹல்க் ஹோகன் 71 வயதில் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

WWF”ஹல்க்மேனியா”ஜாம்பவான் ஹல்க் ஹோகன் 71 வயதில் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

“ஹல்க்மேனியா” என்ற பெயரில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த மற்போர் ஜாம்பவான் ஹல்க் ஹோகன் (உண்மையான பெயர் டெர்ரி பொல்லியா) தனது 71வது வயதில் காலமானார். சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டதாக அவசரச் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் கூறப்படுகிறது. ஹோகன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவர் உயிர் பிழைக்கவில்லை எனத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. WWE ஹால் ஆஃப் ஃபேமர் ஆன ஹோகனின் மறைவுக்கு WWE அமைப்பும், பல்வேறு மற்போர் நட்சத்திரங்களும், பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். “குட்பை, பிரதர்” என அவரது பிரசித்தி பெற்ற வாசகத்தைப் பயன்படுத்தி பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1980களில் WWE-யின் (அப்போதைய WWF) முகமாகத் திகழ்ந்து, உலக அளவில் மற்போரை பிரபலப்படுத்தியதில் ஹல்க் ஹோகனுக்கு பெரும் பங்கு உண்டு. “வேர்ல்ட் ஒன்டர் ஹல்க் ஹோகன்” என்ற அவரது முழக்கமும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிற உடைகளும், நெற்றியில் கட்டும் பனியனும் அவருக்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தன. ஆனால், ரிங்கில் அவர் சந்தித்த கடுமையான சண்டைகள் அவரது உடல்நலத்தைப் பெரிதும் பாதித்தன. பல ஆண்டுகளாக முதுகு, இடுப்பு, கழுத்து எனப் பல அறுவை சிகிச்சைகளை அவர் சந்தித்தார். சமீப காலங்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவும், இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு கூட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஹல்க் ஹோகன் மற்போரில் மட்டுமல்லாமல், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவர். சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்திருந்தாலும், மற்போர் உலகின் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே அவர் இறுதிவரை திகழ்ந்தார். அவரது மறைவு, மற்போர் உலகிற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு உலகெங்கிலும் இருந்து இரங்கல்கள் குவிந்து வருகின்றன.