Posted in

பாலியல் குற்றவாளி பைலில் ட்ரம்ப் புகைப்படம் மர்மமான முறையில் நீக்கம்

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆவண வெளியீடாகக் கருதப்படும் ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. சுமார் 3 லட்சம் பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான புகைப்படம் உட்பட குறைந்தது 16 முக்கிய கோப்புகள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளன. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்த ஆவணங்கள் நீக்கப்பட்டிருப்பது, அமெரிக்க நீதித்துறை எதையோ மறைக்க முயல்கிறதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

நீக்கப்பட்ட கோப்புகளில் மிகவும் முக்கியமானது, ஒரு மேஜையின் இழுப்பறையில் (Drawer) வைக்கப்பட்டிருந்த புகைப்படமாகும். அதில் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இது தவிர, எப்ஸ்டீனின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட நிர்வாணப் பெண்களின் ஓவியங்கள் மற்றும் சில அந்தரங்கப் புகைப்படங்களும் இணையதளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை வரை பொதுமக்களின் பார்வைக்குக் கிடைத்த இந்தத் தகவல்கள், சனிக்கிழமை காலை மாயமாகி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இது வெளிப்படைத்தன்மை அல்ல, இது ஒரு திட்டமிட்ட மறைப்பு (Cover-up)” என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ட்ரம்ப் நிர்வாகம் தனக்குச் சாதகமான கோப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு, அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஆதாரங்களை நீக்கி வருவதாகவும், இது ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை’ மீறும் செயல் என்றும் அவர்கள் சாடியுள்ளனர். இருப்பினும், இந்த நீக்கம் குறித்து அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.

ஒருபுறம் பில் கிளிண்டன், மைக்கேல் ஜாக்சன் போன்றவர்களின் புகைப்படங்கள் தாராளமாகப் பகிரப்படும் நிலையில், ட்ரம்ப் தொடர்பான ஆதாரங்கள் மட்டும் நீக்கப்படுவது ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டது எனப் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, எப்ஸ்டீன் நூலகம் (Epstein Library) என்று அழைக்கப்படும் அந்த இணையதளத்தைப் பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால், இணையதளமே முடங்கியது. இன்னும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த ‘மர்ம நீக்கம்’ எப்ஸ்டீன் வழக்கின் மீதான உலகளாவிய பார்வையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.