மிகவும் வயதாகியுள்ள அமெரிக்க அதிபர் ரம், தற்போது நாளுக்கு நாள் மிக மிகக் கடுமையான சட்ட திட்டங்களை அமுல் படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் பிரித்தானிய பிரஜைகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
என்ன கொடுமை இது ? ஜன நாயகம் என்பது எங்கே செல்கிறது ? மேலும் அமெரிக்காவில் தங்கியுள்ள மக்களின் நிலையும் கவலைக்கிடம் !
அமெரிக்காவிற்கு விசா இல்லாமல் சுற்றுலா செல்லும் பிரித்தானிய பிரஜைகள் (Visa Waiver Program) இனி தங்கள் கடந்த ஐந்து ஆண்டுகால சமூக ஊடக வரலாற்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையானது (CBP) இந்த விதிமுறையை இலத்திரனியல் பயண அங்கீகார (ESTA) விண்ணப்பத்தில் கட்டாய தகவல் அம்சமாகச் சேர்க்க முன்மொழிந்துள்ளது. இந்த விதிமுறை அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட சுமார் 40 விசா விலக்கு நாடுகளின் சுற்றுலாப் பயணிகளையும் பாதிக்கும்.
இந்த புதிய விதிமுறையின்படி, விண்ணப்பதாரர்கள் ஐந்து ஆண்டுகால சமூக ஊடகக் கணக்கு விவரங்களை வழங்குவது மட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகால மின்னஞ்சல் முகவரிகள், ஐந்து ஆண்டுகால தொலைபேசி எண்கள், அத்துடன் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த இடம், பிறந்த தேதி போன்ற விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஒரு விண்ணப்பதாரரின் சமூக ஊடகப் பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, அவை ‘அமெரிக்க எதிர்ப்புக்’ (Anti-American) கருத்துகளாகக் கருதப்பட்டால், அவர்களின் நுழைவு நிராகரிக்கப்படலாம் அல்லது எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாதவாறு ‘வாழ்க்கையை மாற்றும் விளைவுகள்’ ஏற்படலாம் எனப் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் அறிவிப்பானது, தனியுரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேசப் பயணிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமுறை சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்துவதுடன், பேச்சுச் சுதந்திரத்தை நசுக்குவதாகவும் அமைந்துள்ளது எனச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய ஏற்கனவே திட்டமிட்டுள்ள பிரிட்டிஷ் கால்பந்து ரசிகர்கள் உட்பட இலட்சக்கணக்கான பயணிகளுக்கு இது கடும் மன அழுத்தத்தையும், பயணத் தாமதத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சிலர், இது போன்ற கடுமையான விதிகள் காரணமாக அமெரிக்காவைத் தவிர்த்து வேறு நாடுகளுக்குச் செல்லத் தூண்டப்படலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
தற்போது, இந்த புதிய விதிமுறைகளுக்கான முன்மொழிவு பொதுமக்களின் கருத்துக்களுக்காக (Public Comments) 60 நாட்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் நிர்வாக ஒப்புதல் பெற்று அமுலுக்கு வரலாம். ஏற்கெனவே, அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட சில விசாக்களுக்கு (H-1B, மாணவர் விசா) விண்ணப்பிப்போர் தங்கள் சமூக ஊடக விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ள நிலையில், விசா விலக்குத் திட்டத்தின் கீழ் வரும் சுற்றுலாப் பயணிகளையும் இந்த அதிகப்படியான கண்காணிப்பு வலையத்துக்குள் கொண்டுவர அமெரிக்கா முடிவெடுத்துள்ளது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.