Posted in

எனக்கு 50 உனக்கு 23: 50வயதில் 6வது திருமணம் 23 வயதுப் பெண்ணை ஏமாறியது எப்படி ?

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரின் ஏழ்மையைப் பயன்படுத்தி, மோசடிக் கும்பல் ஒன்று அவரை ஆசை வார்த்தை கூறி 50 வயது மதிக்கத்தக்க நபருக்குத் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தங்கை வீட்டில் வசித்து வந்த அந்த இளம்பெண்ணுக்குத் திருமணம் கைகூடாததால், வறுமை வாட்டியுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட முருகேஸ்வரி என்ற இடைத்தரகர், திருச்சியில் உள்ள செல்வந்தர் ஒருவரைத் திருமணம் செய்தால் வளமாக வாழலாம் என்றும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்த திருமணத்தைப்பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல், கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி காலையில் ரயிலில் திருச்சியிலுள்ள லாட்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மறுநாள் காலையில் கரூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுமார் 50 வயதுடைய மாரியப்பன் என்பவர் அவருக்குத் தாலி கட்டியபோது, தான் ஏமாற்றப்பட்டதை இளம்பெண் உணர்ந்தார். இதுகுறித்து அவர் முருகேஸ்வரியிடம் கேள்வி எழுப்ப, “திருமணம் முடிந்துவிட்டது, இனி பேசக்கூடாது” எனப் பதில் வந்துள்ளது. அப்போதுதான், திருமணம் என்ற போர்வையில் மாரியப்பனுக்குத் தன்னைப் பல லட்சம் ரூபாய்க்குக் கமிஷனாக விற்றுவிட்டனர் என்ற கொடூரமான உண்மை அவருக்குத் தெரியவந்தது.

இச்சம்பவத்தில், கமிஷன் தொகையைப் பங்கு பிரிப்பதில் முருகேஸ்வரிக்கும் அவருடன் வந்த மற்ற இடைத்தரகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைக் கண்ட இளம்பெண், அங்கிருந்து தப்பித்து திண்டுக்கல்லில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்தார். இதற்கிடையில், மணப்பெண் தப்பிச் சென்றதை அறிந்த மாரியப்பன் மற்றும் அவரது அடியாட்கள், இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த பாதிக்கப்பட்ட பெண், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தனது புகாரில், தனது ஏழ்மையைப் பயன்படுத்திய மாரியப்பன், ஏற்கனவே இவரைப் போல் ஏழைப் பெண்களைத் திருமணம் செய்து வசதி படைத்தவர்களுக்கு விற்பனை செய்ததும், இது அவருக்கு 6-வது திருமணம் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாரியப்பன் பல்வேறு ஊர்களில் இடைத்தரகர்களை நியமித்து அவர்களுக்குக் கமிஷன் கொடுத்துத் தொடர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் மீதும் உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். ‘மோசடி மன்னன்’ என அறியப்படும் மாரியப்பன் மற்றும் இந்தத் திருமண மோசடிக்குப் பின்னால் உள்ள இடைத்தரகர்கள் குறித்த இந்த விசாரணையின் முடிவில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.