Posted in

தமிழர் கடை உடைக்கப்பட்டது: இன்சூரன்ஸ் இருந்தும் தர மறுப்பு.. ஏன் தெரியுமா ?

LONDON: 06-05-2025

ஈழத் தமிழர்களே! இந்தப் பதிவை நீங்கள் வாசிப்பது மட்டுமல்ல, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடும் பகிர்ந்து கொள்வதும் நல்லது.

பிரித்தானியாவில் உள்ள எப்சத்தில் (Epsom) ஈழத் தமிழர் ஒருவர், குஜராத்தி ஒருவரிடமிருந்து கடை ஒன்றை வாங்கி நடத்தி வந்தார். கடை சரியாக நடக்கவில்லை என்ற கவலை ஒருபுறம் இருக்க, கொரோனா பெருந்தொற்று வந்த வேளையில் கடை கொஞ்சம் நடக்க ஆரம்பித்தது. அந்த நேரம் £50,000 பவுண்டு ‘பவுன்ஸ் பாக் லோனைப்’ (Bounce Back Loan) போட்டு கடையை மேலும் விரிவுபடுத்தி இருந்தார்.

இவ்வாறு சுமாராக நடந்து வந்த இந்தக் கடையில், கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருடர்கள் புகுந்திருக்கிறார்கள். அதிகாலை 2 மணிக்குப் புகுந்த திருடர்கள், வேறு எதனையும் எடுக்காமல், சிகரெட்டுகளை மட்டும் கறுப்பு ‘பின் பேக்கில்’ (Bin bag) அள்ளிக்கொண்டு சுமார் 4 முதல் 5 நிமிடத்தில் அந்த இடத்திலிருந்து தப்பிவிட்டார்கள். அலாரம் (Alarm) அடித்ததால் பொலிசார் அங்கே வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்னரே கள்வர்கள் தப்பிவிட்டார்கள்.

இந்த நிலையில், மிகவும் ஒரு நல்ல இன்சூரன்ஸ் கம்பெனியில், கடைக்கான இன்சூரன்ஸை இந்தத் தமிழர் ஏற்கனவே செய்திருந்ததால், அவர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் இழந்த பணத்தைத் தருமாறு  Claim செய்துள்ளார். முதலில் பொலிசாரின் அறிக்கையைக் கோரிய இன்சூரன்ஸ் கம்பெனி, பின்னர் CCTV காட்சிகளை அனுப்புமாறும் கோரியுள்ளது.

இதனையடுத்து சில தினங்கள் கழித்து, தங்களால் இழப்பீட்டுத் தொகையைத் தர முடியாது என்ற கடிதம் வந்துள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால்: சிகரெட் இருந்த கேபினட்டில் (Cigarette Cabinet) இருந்த பூட்டைக் கடை உரிமையாளர் பூட்டவில்லை என்றும், இதனால் கள்வர்கள் இலகுவாகத் திறந்து சிகரெட்டைக் கொள்ளையடித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். பூட்டை உடைக்கக் கொஞ்ச நேரமாவது பிடித்திருந்தால், பொலிசார் வந்திருப்பார்கள்; அதற்குள் அவர்கள் ஓடியிருப்பார்கள். எனவே, இது கடை உரிமையாளரின் தவறு என்கிறது இன்சூரன்ஸ் கம்பெனி.

பொலிசார் கடைக்கு முன்னால் வந்த நேரம், கள்வர்கள் தப்பிச் சென்ற நேரம் என்று சகலதையும் கணக்குப் பார்த்து, எங்கே ஒரு பிழையைக் கண்டுபிடிக்கலாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றித் தேடி, இப்படி ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, இழப்பீட்டுத் தொகையைத் தரமாட்டோம் என்கிறது இந்த இன்சூரன்ஸ் கம்பெனி.

நம்மில் கடை வைத்திருக்கும் எத்தனை பேர், கடையைப் பூட்டும் போது சிகரெட் கேபினட்டைப் பூட்டிவிட்டுச் செல்கிறோம்? எனவே தமிழர்களே விழிப்பாக இருக்கவும். இந்தப் பதிவை மற்றவர்களோடும் பகிரவும். இனியும் வேறு தமிழர்களுக்கு இதுபோல் நடக்கக்கூடாது.