சூர்யா ஏவுகணை! அமெரிக்காவை குறி வைக்கிறதாம் இந்தியா.. புலம்பி தள்ளும் பாகிஸ்தான்!

சூர்யா ஏவுகணை! அமெரிக்காவை குறி வைக்கிறதாம் இந்தியா.. புலம்பி தள்ளும் பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில், ‘சூர்யா’ எனும் பெயரில் புதிய ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருவதாகவும், இது அமெரிக்காவை குறிவைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்றும் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. இந்த ஏவுகணையால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என கூறியுள்ள பாக்., சூர்யாவால் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள்தான் கவலைக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் தற்காப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை ராணுவம் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த லிஸ்ட்டில் புதியதாக சூர்யா எனும் அதிநவீன, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் இந்திய ராணுவம் சமீபத்தில் இணைத்திருந்தது. இது குறித்துதான் தற்போது பாகிஸ்தான் புலம்பியுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள க்வாய்ட்-இ-அசாம் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பள்ளியின் பாதுகாப்பு நிபுணரான பேராசிரியர் ஜாபர் நவாஸ் ஜஸ்பால் என்பவர்தான் இதனை தெரிவித்திருக்கிறார்.

“இந்தியாவின் புதிய ஏவுகணையின் தாக்குதல் தூரம் மிக மிக அதிகம். எனவே, எங்களுக்கு இது குறித்து எந்த கவலையும் இல்லை. ஏனெனில் எங்களை தாக்க ஏற்கெனவே பல ஏவுகணைகளை இந்தியா உருவாக்கி வைத்திருக்கிறது. ஆகவே, புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் சூர்யா ஏவுகணை அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும்தான் சிக்கலை ஏற்படுத்தும். எங்களுக்கு இல்லை” என ஜஸ்பால் வேர்ல்ட் எகோ செய்தி ஊடகத்திடம் ஜாபர் நவாஸ் தெரிவித்துள்ளார். சூர்யா ஏவுகணை 70,000 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

இதன் தாக்குதல் தூரம், 12,000-16,000 கி.மீ தொலைவாகும். அதாவது இந்தியாவிலிருந்து இதனை ஏவினால் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டொரோன்டோ, வான்கூவர், பிரேசிலியா, ரியோ டி ஜெனிரோ, பியூனஸ் அயர்ஸ், சாண்டியாகோ, கேப் டவுன், ஜோகன்னஸ்பர்க், சிட்னி, மெல்போர்ன், மெக்ஸிகோ சிட்டி, லிமா, ஆக்லாந்து என அண்டார்டிகா வரை ஏவுகணை தாக்கும். எனவே இந்த ஏவுகணை தயாரிப்பை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

ஆனால் ஏவுகணை குறித்து பாகிஸ்தானின் கூற்றை இந்தியா மறுத்திருக்கிறது. சூர்யா ஏவுகணை முழுக்க முழுக்க தற்காப்பு நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டது என்றும், தாக்குதல் எண்ணத்தில் இரு உருவாக்கப்படவில்லை எனவும் டிஆர்டிஓ தெரிவித்திருக்கிறது. சமீப காலமாக இந்தியாவுக்கு சீனா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவாகியிருக்கிறது. சீனாவின் நடவடிக்கைகள் இந்தியாவின் வடக்கு பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தனது ராணுவ திறனை அதிகரித்துள்ளது. புதிய நிலைகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஒருவேளை சீனாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டால் தற்காப்புக்காக சூர்யா ஏவுகணை பயன்படும் என்றும் சொல்லப்படுகிறது.