கீவ்: உக்ரைனில் இருந்தபடியே ரஷ்யாவில் உள்ள 30 விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் 370.4 நீண்டதூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஜேஏஎஸ்எஸ்எம் வகை ஏவுகணையை உக்ரைனுக்கு, அமெரிக்கா வழங்கி உள்ளது. இது ரஷ்யாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில் ரஷ்யாவும் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்றால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்பட்டது. அதன்படி டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு இருநாடுகள் இடையேயான போரும் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மோசமாகிவிட்டது.
இதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் தான் காரணம். அதாவது ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவி வருகின்றன. இந்த நாடுகள் சார்பில் பொருளாதார உதவி, ஆயுத உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஏவுகணைகளும் கொடுக்கப்பட்டது. இருப்பினும் தங்களின் அனுமதியின்றி அந்த ஏவுகணைகளையும் ரஷ்யா மீது ஏவ உக்ரைனுக்கு அந்த நாடுகள் தடை விதித்தன. இதனால் உக்ரைன் அந்த ஏவுகணைகளை பயன்படுத்தாமல் இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து செல்லும் ஜோ பைடன் சமீபத்தில் அமெரிக்காவின் ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவ உக்ரைனுக்கு அனுமதியளித்தார். அதேபோல் பிரிட்டனும் பச்சைக்கொடி காட்டியது.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவி தாக்குதல் நடத்தியது. கடந்த 19ம் தேதி அமெரிக்காவின் தயாரிப்பான ATACMS வகை 6 ஏவுகணை மற்றும் கடந்த 21ம் தேதி அமெரிக்காவின் HIMARS மற்றும் பிரிட்டனின் Storm Shadow cruise missiles உள்ளிட்டவற்றால் ரஷ்யாவை உக்ரைன் தாக்கியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யாவும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் டினிப்ரோ நகரில் ரஷ்யா ஒரெஷ்னிக் வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் போர் என்பது தீவிரமாகி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது அமெரிக்காவால் ரஷ்யாவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது நீண்டதூரம் சென்று இலக்கை குறிவைத்து தாக்கும் ஜேஏஎஸ்எஸ்எம் வகை ஏவுகணையை அந்த நாடு உக்ரைனுக்கு வழங்கி உள்ளது. இதுதான் ரஷ்யாவுக்கு பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஜேஏஎஸ்எஸ்எம் வகை ஏவுகணை என்பது நவீன தொழில்நுட்பத்துடன் செயல்பட கூடியது. இதன் முழுப்பெயர் என்னவென்றால் Joint-Air-to Surface Sandoff Missile (JASSM) என்பார்கள். இந்த ஏவுகணை மூலம் உக்ரைனில் இருந்தே ரஷ்யா மீது தாக்குதல் நடத்த முடியும். 1088 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணையில் 453 கிலோ அளவுக்கு வெடிப்பொருட்களை நிரப்பி வைக்க முடியும்.
இந்த ஏவுகணையால் குறைந்தபட்சம் 370.4 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும், அதிகபட்சமாக 900 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் தாக்குதல் நடத்த முடியும். மேலும் உக்ரைனில் இருந்தே இந்த ஏவுகணையால் ரஷ்யாவின் 30 விமான தளங்களை குறிவைத்து அழிக்க முடியும் என்று ஆஜ்தக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உக்ரைனிடம் எப்-16 ரக போர் விமானங்கள் உள்ளன. இந்த போர் விமானங்களுடன் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தும்போது அது ரஷ்யாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா, உக்ரைனுக்கு 275 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உதவியை அறிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாக இந்த ஏவுகணை என்பது உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஏவுகணையை உக்ரைன் இன்னும் பயன்படுத்தவில்லை. இருப்பினும் இந்த ஏவுகணை என்பது ரஷ்யாவுக்கு பெரிய ஆபத்தாக பார்க்கப்படும் நிலையில் அந்த நாடும் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதனால் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் என்பது மேலும் தீவிரமடைந்துள்ளது.