கினியா: கினியா நாட்டில் உள்ள என்’செரேகோர் என்ற நகரில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவர் கொடுத்த தவறான முடிவால் மிக பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. மைதானத்திற்கு வெளியே இரு அணி ரசிகர்களும் மோதிக் கொண்ட நிலையில், இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாக பகீர் கிளப்பியுள்ளது
பொதுவாக விளையாட்டை நாம் விளையாட்டாகப் பார்க்க வேண்டும் எனச் சொல்வார்கள். ஆனால், ரசிகர்கள் பல நேரங்களில் விளையாட்டை பெர்சனலாக கூட எடுத்துக் கொள்வார்கள்.
இதனால் ஒரு அணி தோற்றால் அந்த அணியின் ரசிகர்களைக் கிண்டல் செய்வது, சில நேரம் தாக்குவது கூட நடக்கும். ஆனால், இங்கே மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியில் வெடித்த வன்முறையில் 100+ கொல்லப்பட்ட ஷாக் சம்பவம் நடந்துள்ளது. வன்முறை: கினியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான என்’செரேகோர் என்ற ஊரில் கால்பந்து போட்டிகள் நடந்துள்ளன. அப்போது திடீரென வன்முறை வெடித்த நிலையில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2 லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரில் மைதானத்தில் சிறியளவில் ஏற்பட்ட வன்முறை கொஞ்ச நேரத்தில் மிகப் பெரிதாக வெடித்தது. இது தொடர்பாக அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உடல்கள் தான் வரிசையாக உள்ளன. இங்கு நிரம்பிவிட்டதால் பல உடல்கள் வராண்டாவில் வைக்கப்பட்டுள்ளது. பிணவறை எப்போதோ நிரம்பிவிட்டது. இதை வைத்துப் பார்க்கும் போது நிச்சயம் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவே தெரிகிறது” என்றார்.
வீடியோ: மேலும், வன்முறை தொடர்பாக பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் ஒன்றில் போட்டி நடந்த மைதானத்திற்கு மக்கள் அடித்துக் கொள்வதும் அங்கு மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது போலவும் தெரிகிறது. மேலும், அங்குச் சாலையிலேயே ஏராளமான உடல்கள் இருப்பதும் தெரிகிறது. வன்முறையாளர்கள் அங்குள்ள போலீஸ் நிலையத்தையும் கூட சூறையாடி தீ வைத்தாகக் கூறப்படுகிறது. எப்படி இவ்வளவு பெரிய வன்முறை ஏற்பட்டது என்பது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “கால்பந்து போட்டியில் நடுவர் தவறான முடிவைக் கொடுத்தார். அதில் இருந்து தான் இவை அனைத்தும் தொடங்கின. நடுவரின் முடிவு தொடர்பாக வீரர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அப்போது திடீரென ரசிகர்கள் சிலர் மைதானத்திற்குள் நுழைந்தனர். அங்கு ஆரம்பித்த வன்முறை முடியவே இல்லை” என்றார்.
கால்பந்து: 2021ம் ஆண்டு கினியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத் தலைவரான மமதி டூம்பூயாவின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த கால்பந்து போட்டி தொடர் நடக்கும். அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த வன்முறை அங்கு மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏகப்பட்ட இயற்கை வளங்கள் இருக்கும் போதிலும், கினியா ஒரு ஏழை நாடாகவே உள்ளது. பல ஆண்டுகளாகக் கினியா சர்வாதிகார அதிகாரிகளுக்குக் கீழ் இருப்பதாலேயே இயற்கை வளங்கள் இருக்கும் போதிலும் வளர்ச்சியை அடைய முடியவில்லை. மமதி டூம்பூயா ராணுவத்தை வைத்து ஆட்சியைப் பிடித்த போது, சர்வதேச நாடுகள் அவருக்கு அழுத்தம் கொடுத்தன. இதனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தலை நடத்த அவர் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.