இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு 22 நாட்களில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 1947ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர்களுக்கு எதிராக ஐந்து தடவைகள் நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
ஆனால் அவை ஐந்தும் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவராக இருந்தாலும் தவறிழைத்தால் அது தொடர்பில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க ஊடக பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். அன்றைய தினமே சபாநாயகர் அசோக்க ரண்வலவின் இராஜினாமாவும் இடம்பெற்றுள்ளது. ஒரு வகையில் இந்த சம்பவம் அநுரவின் நேர்மையான நிர்வாகத்தை மக்கள் மத்தியில் ஒரு படி மேலுயர்த்தியுள்ளது எனலாம்.