வாஷிங்டன்: கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைப்பது நல்ல ஐடியா. கனடாவில் வசிக்கும் பலரும் அந்த நாட்டை அமெரிக்காவுடன் இணைக்க விரும்புகின்றனர் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள கனடா விரைவில் அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்காவும், கனடாவும் அண்டை நாடுகளாக உள்ளன. தற்போது கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ உள்ளார். இவர் தற்போது நம் நாட்டுன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதனால் நம்நாட்டுக்கும், கனடாவுக்கும் இடையேயான உறவு என்பது மோசமாகி உள்ளது.
அதேபோல் தான் அண்டை நாடான அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப் தான். அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றாலும் கூட டொனால்ட் டிரம்ப் இன்னும் அந்த பொறுப்பை ஏற்கவில்லை. 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி தான் அவர் அமெரிக்க அதிபராக உள்ளார்.
ஆனால் அமெரிக்க அதிபராகும் முன்பே டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் தான் டொனால்ட் டிரம்ப் சொன்ன வார்த்தை கனடாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கனடாவுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதாவது கனடாவின் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஏற்கனவே கனடா பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் இது சிக்கலை ஏற்படுத்தும்.
இதையடுத்து சமீபத்தில் டொனால்ட் டிரம்பை, ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூடுதல் வரி விதிப்பதை கைவிட வேண்டும் என்று ஜஸ்டின் ட்ரூடோ, டொனால்ட் டிரம்பிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு டொனால்ட் டிரம்ப், வரி விதிக்கப்படாமல் இருந்தால் அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா மாறும் என்று ஜஸ்டின் ட்ரூடோவிடம் கூறியுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியானது.
இந்நிலையில் தான் தற்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதில் ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளார். தற்போது அமெரிக்காவில் 50 மகாணங்கள் உள்ளன. கனடாவை 51 வது மாகாணமாக இணைப்பது நல்ல ஐடியா என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப் தனது வலைதள பக்கத்தில் இன்று கூறியுள்ளதாவது: ‛‛கனடாவிற்கு ஆண்டுக்கு 100,000,000 அமெரிக்க டாலர் அளவுக்கு மானியம் வழங்குகிறோம். இது ஏன் செய்கிறோம்? என்று யாராலும் பதிலளிக்க முடியாத நிலை உள்ளது. இப்படியான சூழலில் கனடாவுக்கு மானியம் வழங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. கனடாவில் வசிக்கும் பலரும் அந்த நாட்டை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன்மூலம் வரி மற்றும் ராணுவ துறையில் பெரும் நிதியை சேமிப்பார்கள். கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றுவது நல்ல யோசனை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த நாட்டின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃபின்லாந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப் கூறும்போது, ‛‛நிதி அமைச்சர் ராஜினாமா செய்தது அல்லது அவரை நீக்கிய காரணத்தால் தி கிரேட் ஸ்டேட் ஆப் கனடா திகைத்து நிற்கிறது” என்று கூறினார். இதில் கனடாவை நாடு என்று குறிப்பிடாமல் மாகாணம் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தார். இத்தகைய சூழலில் தான் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக சேர்ப்பது நல்ல ஐடியா என்று டொனால்ட் டிரம்ப் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.