மாஸ்கோ: நேட்டோவில் இணைவதை காரணம் காட்டி உக்கிரன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளை நெருங்கும் நிலையில் ரஷ்யாவின் முக்கிய பகுதிகளில் உயர் கோபுரங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியது உக்ரைன். இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
நேட்டோ மற்றும் டான்பாஸ் பகுதிகளை காரணம் காட்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கிய நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மீது உடனான ரஷ்யாவின் போரால் உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகளும் கோரிக்கை விடுத்த நிலையில் ரஷ்யா அதனை மறுத்து வருகிறது. குறிப்பாக ஐநா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் நோக்கங்களை அடையும் என்றும், ரஷ்ய மொழி பேசும் டான்பாஸ் பகுதியைப் பாதுகாக்கும் முயற்சியில் படையெடுப்பைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என ரஷ்ய அதிபர் விளடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வரும் நிலையில் அதனை விட பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ராணுவ பலத்திலும் குறைவாக உள்ள உக்கரைன் இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்து போர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. காரணம் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி அளித்து வருகிறது. இதனால் போர் தீவிரம் அடைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா உக்ரைனுக்கு அதிநவீன தாக்குதல் ட்ரோன்கள், ஏவுகணைகளை வழங்கி உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் உள்ள முக்கிய நகரங்களில் பெரிய பெரிய கட்டிடங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான காசன் நகர் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்திய பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. அங்குள்ள உயர் கோபுரங்கள், மக்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை குறிவைத்து உக்ரைன் ட்ரோன்கள் பறந்து சென்று அவற்றின் மீது மோதி, வெடி பொருட்களை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலை நினைவுபடுத்தும் வகையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் உக்ரைன் தாக்குதலை அடுத்து காசான் நகரில் உள்ள கட்டிடங்களில் வசித்து வரும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வரை ஆறு கட்டிடங்கள் பலத்த சேதமடைந்த நிலையில், ரஷ்யாவின் சார்பில் பதில் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரு நாடுகளும் குடியிருப்பு பகுதிகளில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.