அமெரிக்காவில் வொஷிங்டன் மாநிலத்திலுள்ள விலங்குகள் சரணாலயத்தில் கடந்த பல வாரங்களில் ஒரு வங்காளப் புலி மற்றும் நான்கு கூகர் புலிகள் உட்பட 20 புலிகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளன.
“இந்த விலங்குகள் இறந்த சோகம் எங்களை ஆழமாக பாதித்துள்ளது, இந்த நம்பமுடியாத இழப்பால் நாங்கள் அனைவரும் கவலை அடைகிறோம்” என வொஷிங்டனின் வைல்ட் ஃபெலிட் அட்வகேசி சென்டர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றால் சரணாலயம் தனிமைப்படுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் என்பது கோழி மற்றும் காட்டுப் பறவைகள் போன்ற உயிரினங்களில் காணப்படும் தொற்று நோயாகும். பறவைகள் மட்டுமின்றி, வன விலங்குகளான நரிகள், காட்டு நாய்கள், கடல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களான சீல், நீர்நாய் போன்ற பாலூட்டிகளையும் இந்த வைரஸ் பாதிக்கிறது.
பறவைகளின் எச்சங்கள், எச்சில்கள் அல்லது அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் இந்த நோய் சில நாட்களில் ஒட்டுமொத்த பறவை கூட்டத்திற்கே பரவுகிறது.
” அமெரிக்காவில் நவம்பர் மாதம் பிற்பகுதியிலும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியிலும் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய விலங்குகள் உயிரிழந்தன. எங்களுக்கு இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு நடந்தது இல்லை. விலங்குகள் பொதுவாக முதுமை அடைந்தே இறக்கும். இது ஒரு கொடிய வைரஸ்” என சரணாலயத்தின் பணிப்பாளர் மார்க் மேத்யூஸ் நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் கால்நடைகள் மற்றும் கோழிகளிடையே தொடர்ந்து பரவி வருவதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு மனிதருக்கு இந்த வைரஸ் தொற்று பரவுகிறது.
ஐந்து ஆபிரிக்க பூனைகள், நான்கு பாப்கேட்கள், இரண்டு கனடா லின்க்ஸ் மற்றும் ஒரு வங்காளப் புலி உள்ளிட்டவைகள் உயிரிழந்துள்ளன. தற்போது 17 புலிகள் மட்டுமே சரணாலயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் நீண்ட காலமாக பண்ணைகளிலுள்ள கோழிகளையே இந்த வைரஸ் பாதித்திருந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் முதல் முறையாக கால்நடைகளையும் தாக்க ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் இவ்வாண்டு ஏப்ரல் மாத்தத்தில் மொத்தம் 61 பறவைக் காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்குவதில்லை எனவும். மனிதனிடமிருந்து மனிதனுக்கும் தொடர்ந்து பரவுவது இல்லை எனவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் லூசியானாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் அவருக்கு லேசான அறிகுறிகளே தென்பட்டுள்ளன.
கடந்த வாரம் மாடுகளிடையே பறவை காய்ச்சல் தொற்று பரவியதால் விரைவாக செயல்பட்டு அவசரநிலையை கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.