Posted in

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ வீட்டில் அதிரடிப் பொலிஸ் சோதனை – தப்பிச் செல்லாதிருக்க கணுக்கால் டேக்!

முன்னாள் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிரேசில் பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர். அவரது குற்றவியல் விசாரணைக்கு மத்தியில் அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளதால், அவருக்கு மின்னணு கணுக்கால் டேக் (electronic ankle tag) பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ரத்து செய்து, ஆட்சியில் தொடர சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக போல்சனாரோ தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இந்தச் சதித்திட்டத்தின் மூளையாகச் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், போல்சனாரோ எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்து வருகிறார்.

இந்த திடீர் சோதனை, போல்சனாரோவின் அரசியல் அலுவலகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், அவர் வெளிநாட்டு அதிகாரிகளுடன் பேசுவதற்கும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போல்சனாரோவின் வீட்டில் இருந்து ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாக CNN பிரேசில் தெரிவித்துள்ளது.

போல்சனாரோ தரப்பு வழக்கறிஞர்கள், “தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்” குறித்து “ஆச்சரியத்தையும், கோபத்தையும்” வெளிப்படுத்தினர். இதுவரை நீதிமன்ற உத்தரவுகளுக்கு போல்சனாரோ இணங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போல்சனாரோவின் நெருங்கிய கூட்டாளி ஆவார். போல்சனாரோ மீதான குற்றவியல் விசாரணையை நிறுத்தும்படி தற்போதைய பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை மிரட்டியுள்ளார். ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் 50% வரி விதிப்பேன் என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். போல்சனாரோவுக்கு எதிரான “சூனிய வேட்டை” விசாரணைக்கும் இந்த வரி அச்சுறுத்தலுக்கும் டிரம்ப் தனது கடிதத்தில் தொடர்புபடுத்தியிருந்தார்.

போல்சனாரோ, முன்னாள் இராணுவத் தலைவராகவும், 2019 முதல் 2022 வரை பிரேசில் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர். 2023 ஜனவரியில் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரேசிலிய தலைநகரில் கலவரத்தில் ஈடுபட்ட நிகழ்வுகளுக்கும், 2022 தேர்தல் முடிவுகளை அவர் ஏற்க மறுத்ததற்கும் அவரது பங்கு குறித்து இரண்டு வருடங்களாக பிரேசில் ஃபெடரல் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு, போல்சனாரோவுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். அவருக்கு எதிராக மேலும் பல விசாரணைகள் நிலுவையில் உள்ளன.

Exit mobile version