கிருஷ்ணகிரி அருகே முன்விரோதத்தில் தொழிலாளி படுகொலை: தப்பியோடிய 3 பேருக்கு போலீஸ் வலை!

இந்த செய்தியை பகிருங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூரை சேர்ந்தவர் சிக்கண்ணா. விவசாயி. இவரது மகன்கள் முனியப்பா (45), லகுமப்பா (40). சிக்கண்ணா மற்றும் முனியப்பா ஆகியோர் தனித்தனியே காளை மாடுகள் வளர்த்து வருகின்றனர். இவை அந்த பகுதிகளில் நடைபெறும் எருதுவிடும் போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளன. லகுமப்பா தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில், சிக்கண்ணாவின் மாடுகள் போட்டியில் சரியாக ஓடவில்லை என கூறப்படுகிறது. இதற்கு தனது அண்ணன் முனியப்பா செய்வினை வைத்து விட்டதாக கூறி, அவரிடம் லகுமப்பா தகராறு செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணன் – தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, முனியப்பாவிற்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த தேவராஜ், விஜய் மற்றும் சதிஷ் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நின்றிருந்த லகுமப்பாவிடம், தேவராஜ் உள்ளிட்ட மூவரும் தகராறு செய்துள்ளனர். அப்போது, அவர்கள் லகுமப்பாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த லகுமப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் கெலமங்கலம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us